Pages

அஜித், விஜய் படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்திய கோச்சடையான்:


அஜித், விஜய் படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்திய கோச்சடையான்:

ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் பொங்கலுக்கு வருவதால் விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’ படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
‘கோச்சடையான்’ படத்தை சுமார் 700 திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். ‘எந்திரன்’ படமும் இதே அளவு திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 950 திரையரங்குகள் உள்ளன. இதில் 700 திரையரங்குகள் ‘கோச்சடையானு’க்கு ஒதுக்கப்பட்டால் மீதி 250 திரையரங்குகள்தான் உள்ளன.
இவற்றை விஜய், அஜீத் படங்களுக்கு சரிபாதியாக பங்கிட்டாலும், 125 திரையரங்குகளே கிடைக்கும். இதனால் இவ்விரண்டு படக்குழுவினரும் தவிக்கிறார்கள். ‘கோச்சடையான்’ படப்பிடிப்பை ஏற்கனவே முடித்து வைத்துள்ளனர்.
தற்போது வெளிநாட்டு ஸ்டூடியோக்களில் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. ஹாலிவுட் தரத்தில் நவீன தொழில்நுட்பங்கள் இப்படத்தில் புகுத்தப்படுகின்றன.
இப்படம் ஜனவரி 10ம் திகதி ரிலீசாகும் என்றும் பாடல்கள் டிசம்பர் 12ம் திகதி வெளியிடப்படும் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூன்று படங்களும் ஒன்றாக வருவதால் திரையரங்குகள் தட்டுப்பாடு, வசூல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம் என்ற அச்சம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் நிலவுகிறது.
பொங்கல் தமிழர்களின் முக்கியமான பண்டிகை என்பதால் மூன்று படக்குழுவினரும் தங்கள் படத்தை ரிலீஸ் செய்வதில் விடாப்பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது.
‘கோச்சடையான்’ படத்துக்கு ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘3டி’யில் இப்படம் வருகிறது. மோஷன் கேப்சர் என்ற நவீன தொழில் நுட்பத்தில் இப்படத்தை எடுத்துள்ளனர்.
ரஜினி தந்தை, மகன் என இரு வேடங்களில் வருகிறார். தந்தைக்கு ஜோடியாக ஷோபனாவும், மகன் ஜோடியாக தீபிகா படுகோனேயும் நடிக்கின்றனர்.
சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கிஷெராப், ருக்மணி விஜயகுமார் போன்றோரும் உள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது. ஜப்பானில் ரஜினிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். எனவே ஜப்பான் மொழியிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.