சென்னை: சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 8 நாட்கள் நடக்கிறது. இதில், 25 தமிழ்ப் படங்கள் உள்பட 150 படங்கள் திரையிடப்படுகின்றன.
தமிழ் சினிமாவில் உள்ள பிரபல இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை உறுப்பினர்களாகக்கொண்ட ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன்' அமைப்பு கடந்த 2003-ம் ஆண்டு முதல் சென்னையில் சர்வதேச பட விழாக்களை நடத்தி வருகிறது.
‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன்' நடத்தும் 11-வது சர்வதேச திரைப்படவிழா சென்னையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.
விழாவில், சிறந்த தமிழ் படங்களுக்கான விருதுகளும், சிறப்பு நடுவர் விருதுகளும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெறும் சர்வதேச படவிழாவில் 55 நாடுகளைச் சேர்ந்த 150 படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழ் படங்களுக்கிடையே போட்டி நடத்தி, தரம் வாய்ந்த படங்களுக்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
2012-ம் ஆண்டு அக்டோபர் 16-ந் தேதி தொடங்கி 2013-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி வரை தயாரிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள் இந்த போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷபனா ஆஸ்மி
இந்த சர்வதேச படவிழாவின் நிறைவு விழா டிசம்பர் 19-ந் தேதி நடைபெற இருக்கிறது. அதில், பிரபல இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி கலந்துகொள்கிறார். தமிழக அரசு உதவியுடன் இந்த சர்வதேச படவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் கணிசமான தொகையை இதற்காக தமிழக அரசு வழங்கி வருகிறது.
- See more at: http://www.tamil.thecinemanews.com/2013/11/12.html#sthash.X66lfDDb.dpuf