Pages

all in all அழகுராஜா– திரைவிமர்சனம்


நடிகர் : கார்த்தி
நடிகை : காஜல் அகர்வால்
இயக்குனர் : எம்.ராஜேஷ்
இசை : பாலசுப்பிரமணியம்
ஓளிப்பதிவு : எஸ்.தமன்
யாருமே பார்க்காத படு லோக்கலான சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் கார்த்தி. அவருடைய நண்பனாக வருகிறார் சந்தானம். இருவரும் இந்த சேனலை மக்கள் மத்தியில் எப்படியாவது பிரபலப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான வேளைகளில் களமிறங்குகின்றனர்.
இந்த வேளையில் மேடையில் பாட்டு பாடி டார்ச்சர் பண்ணும் காஜல் அகர்வாலை பார்த்ததும் அவர்மீது காதல் கொள்கிறார் கார்த்தி. ஆனால், காஜலோ கார்த்தியை வெறுத்து ஒதுக்குகிறார். கார்த்தியின் அப்பா பிரபுவும் காஜல் இந்த காதலுக்கு ஓகே சொன்னாலும் தான் இவர்களுடைய காதலை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என விடாபிடியாக இருக்கிறார். அதற்கு பிரபு ஒரு காரணமும் கூறுகிறார்.
அந்த காரணம் என்ன? கார்த்தியும், காஜல் அகர்வாலும் இறுதியில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை காமெடியுடன் கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
அழகுராஜாவாக வருகிறார் கார்த்தி. பிளாஸ்பேக் காட்சியில் பிரபுவின் 80-கள் கெட்டப்பிலும் நடித்துள்ளார். பிரபுவின் கெட்டப்பில் நடிப்பதற்கு ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். அந்த சிரமம் நடிப்பில் தெரிகிறது. மற்றபடி அழகுராஜாவா ஜொலித்திருக்கிறார்.
சந்தானம் இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என்றுகூட சொல்லலாம். கார்த்திக்கு இணையாக படம் முழுவதும் வலம் வருகிறார். சந்தானம்-ராஜேஷ் கூட்டணியில் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும். அதேபோல் இந்த படத்திலும் சந்தானம் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகக்கூடும். கரீனா சோப்ரா என்ற பெண் வேடத்திலும் சந்தானம் நடித்திருக்கிறார். ஆனால், பார்க்கத்தான் சகிக்கமுடியவில்லை.
சித்ரா தேவிப்ரியா என்ற கதாபாத்திரத்தில் மேடை பாடகியாக வருகிறார் காஜல் அகர்வால். மற்ற படங்களைவிட இந்த படத்தில் அழகாக இருக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்திருந்தாலும் காமெடி பண்ணுவதில் முத்திரை பதித்திருக்கிறார்.
கார்த்தியின் அப்பாவாக பிரபு, அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், இன்னொரு நாயகியாக வரும் ராதிகா ஆப்தே ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக வரும் கோட்டா சீனிவாசராவ், பெண் வேடம் போட்டிருக்கும் சந்தானத்திற்காக அலையோ அலையென அலைவது சிரிக்க வைக்கிறது.
இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் ‘உன்னைப் பார்த்த நேரம்’ பாடல் 80-களில் கேட்கும் மெலோடியை நினைவுப்படுத்துகிறது. பின்னணி இசையும் பரவாயில்லை.
தொடர்ந்து காமெடி படங்களையே எடுத்துவந்த ராஜேஷ்தான் இந்த படத்தையும் எடுத்திருக்கிறார். தனது முந்தைய படங்களைவிட இந்த படத்தில் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தொடர்ச்சியாக காட்சிகளை ரசிக்கமுடியாமல் ஆங்காங்கே கொஞ்சம் கடுப்பேத்தியிருக்கிறார். மற்றபடி காமெடிக்கு படத்தில் பஞ்சமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
மொத்தத்தில் ‘அழகுராஜா’ ஆல் இன் ஆல் காமெடி ராஜா!