Pages

லண்டன் பெண்ணாக இருந்தாலும் மதுரை ரொம்ப பிடிக்கும்; எமி ஜாக்சன்


இங்கிலாந்தில் மாடலிங்கில் கலக்கி கொண்டிருந்த எமி ஜாக்சனை, வாமா துரையம்மா... என மதராசபட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இயக்குநர் விஜய். முதல்படத்தில் அவருக்கு ஏற்ற கதாபாத்திரத்திரம் கிடைக்க அப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, எமியின் நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து தாண்டவம், இந்தி விண்ணைத்தாண்டி வருவாயா(ஏக் தீவானா தா) போன்ற படங்களில் நடித்தவர் அடுத்தப்படியாக தமிழ்சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ஷங்கரின் ஐ படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த சிறப்பு பேட்டி... 

* உங்களுக்கு சென்னை பிடித்திருக்கா?

நான் இப்போது லண்டனை மறந்து போய், இந்திய பெண்ணாகவே மாறி வருகிறேன். பல நாட்கள் சென்னையில் தான் இருக்கேன். லண்டன் தட்பவெப்பம் என்னால் தாங்க முடியல. சென்னை, எனக்கு ரொம்ப செட் ஆகிடுச்சு. என் வீடு மாதிரிஆகிடுச்சு. என்ஜாய் பண்றேன்.

* மதராசபட்டிணம் படத்தில் நடித்தது பற்றி?

என் முதல் தமிழ் படம் மறக்க முடியாத அனுபவம். இந்த மாதிரி பட வாய்ப்பு, எனக்கு திரும்ப கிடைக்குமா என, தெரியவில்லை. நிறைய ரசிகர்கள் பாராட்டினாங்க. இந்த படத்துக்கு அப்புறம், லண்டன் போற எண்ணமே ஏற்படவில்லை. சென்னையில் தங்கி, இந்தி, தெலுங்கு படங்களில் நடிச்சிட்டு இருக்கேன். என்னை இவ்ளோ துாரம் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர் என்றால், அதுக்கு காரணமே, மதராசபட்டிணம் தான். எப்பவும், நான் இந்த படத்தையும், வாய்ப்பையும் மறக்க மாட்டேன்.

* ஐ- படத்துக்கு விக்ரம் சார் வாய்ப்புக்கு உதவினாரா?

நிச்சயமாக இல்லை, ஷங்கர் பிரபலமான இயக்குனர். யார் சிபாரிசையும் ஒத்துக்க மாட்டார். என்னுடைய ரோல், ஐ படத்தில் புதிதாக இருக்கும். அதுக்கு நான் தான், சரியா இருப்பேன்னு முடிவு செய்திருப்பார். அவரா, என்னை நம்பி எனக்கு கொடுத்த வாய்ப்பு தான், ஐ படம்.

* தமிழ் படங்களில் காமெடி உங்களுக்கு புரிஞ்சுக்க முடியுதா?

ரொம்ப புரியல. ஆனா, சிரிச்சேன். இப்பக்கூட , ராஜாராணி படம் பார்த்தேன். பயங்கரமா சிரிச்சேன். இப்ப ஷங்கர் சார் படத்தில நடிக்கிறதால, தமிழ் கொஞ்சம் பேசுறத புரிஞ்சுக்கிற அளவு, பயிற்சி கொடுக்கிறாங்க. வணக்கம் அண்ணா, சாப்பிடுறிங்களா, சாப்பிட்டிங்களா அப்படின்னு கேக்க ஆரம்பிச்சுருக்கேன்.

* இந்தியாவில் பிடித்த இடம் எது?

சென்னையில் இருக்கும் போது, அடிக்கடி கோவளம் பீச் போயிடுவேன். சுத்தமா இருக்கும். யோகா மற்றும் ரிலாக்சுக்கு போயிடுவேன். இந்திப்படம் ஏக் திவானா தா படத்தில் நடிக்கும் போது நிறைய கோவில்களுக்கு போயிருக்கேன். மதுரை, கேரளா, போன்ற இடங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

* ஆர்யாவுடன் நடித்தது பற்றி?

மதராசபட்டிணம் படத்தில் பேசிய முதல் டயலாக், மறந்துட்டியா தான். அப்போது எனக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது. ஆர்யா எனக்கு ரொம்ப உதவி செய்தார். ரொம்ப பிரண்ட்லியான ஆள். கடின உழைப்பாளி. ஜாலியா இருப்பார்.