Pages

Pandiya Nadu Movie Review In Tamil

நடிகர் : விஷால்
நடிகை :லட்சுமி மேனன்
இயக்குனர் :சுசீந்திரன்
இசை :டி.இமான்
ஓளிப்பதிவு :ராஜீவன்
மதுரையில் நடுத்தரக் குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன்-அண்ணி, அண்ணனின் குழந்தை என ஒரே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார் விஷால். இவர் மிகவும் பயந்தாங்கொள்ளி. பதட்டம் ஏதும் வந்தால் இவருடைய வாயில் வார்த்தைகள் திக்கி திக்கி வரும். 

இவர்கள் இருக்கும் வீட்டிற்கு மேலேயே நாயகி லட்சுமிமேனன் அவருடைய அம்மாவுடன் குடியிருக்கிறார். இவர் அங்குள்ள ஸ்கூலில் டீச்சராக வேலைபார்க்கிறார். 

மொபைல் சர்வீஸ் சென்டரில் வேலை பார்க்கும் விஷால் தன் அண்ணனுடைய குழந்தையை ஸ்கூலுக்கு விடப்போகும்போது அங்கு லட்சுமிமேனனை பார்க்கிறார். பார்த்ததும் காதலில் விழுந்துவிடுகிறார். 

தன்னுடைய காதலை லட்சுமிமேனனிடம் கூறினால், அவர் அதை ஏற்பதாக இல்லை. ஒருகட்டத்தில் ரவுடிகள் லட்சுமி மேனனுக்கு டார்ச்சர் கொடுக்க, அதற்கு லட்சுமிமேனன் விஷால் உதவியைநாட, விஷால் தன்னுடைய நண்பனான விக்ராந்த் மூலம் அந்த பிரச்சினையை சரிசெய்துகொடுக்க விஷால்மீது லட்சுமிமேனன் காதல் வயப்படுகிறார். 

இந்நிலையில், அந்த ஊரில் பிரபல தாதாவாக இருக்கும் ஒருவர் இறந்துவிடுகிறார். அவருக்கு பிறகு அந்த பதவியை வகிக்க இரண்டு ரவுடிகளிடேயே போட்டா போட்டி நடக்கிறது. இதில் வில்லன் பரத் தனக்கு போட்டியாக வருபவனைக் கொன்று அந்த பதவிக்கு வருகிறார். 

மதுரையில் அந்த வில்லனுக்கு சொந்தமான கிரானைட் குவாரியில் நடக்கும் முறைகேட்டை தட்டிக்கேட்கும் விஷாலின் அண்ணனுக்கும், வில்லனுக்கும் சண்டை வருகிறது. இந்த சண்டையில் விஷாலின் அண்ணன் கொல்லப்படுகிறார். 

தன்னுடைய மகன் சாவுக்கு வில்லன்தான் காரணம் என்பது அப்பா பாரதிராஜாவுக்கு தெரிய வருகிறது. எனவே, தன் மகனைக் கொன்றவனை பழிவாங்க கூலிப்படையை நியமிக்கிறார். ஒருகட்டத்தில் விஷாலுக்கும் தன் அண்ணனைக் கொன்றவன் வில்லன்தான் என்பது தெரியவர, விக்ராந்த் உதவியுடன் வில்லனைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார். 

இறுதியில், யார் அந்த வில்லனை கொன்றார்கள்? வில்லனை எப்படிக் கொன்றார்கள்? விஷால்-லட்சுமி மேனன் காதல் என்னவாயிற்று என்பதை மண்மணம் மாறாமல் சொல்லியிருக்கிறார்கள். 

விஷாலுக்கு வழக்கமாக வில்லன்களை பாய்ந்து பாய்ந்து அடித்து துவைக்கும் கதாபாத்திரம் அல்ல. ரொம்பவும் பயந்த சுபாவம். ஆனால், இவர் பயந்துகொண்டே வில்லன்களை புரட்டும் விதம் அட்டகாசம். விஷாலின் அற்புதமான நடிப்பு படத்திற்கு மேலும் ஒரு பிளஸ் பாயிண்ட். 

இப்படத்தில் விஷாலுக்கு அடுத்தபடியாக அவருடைய அப்பாவாக வரும் பாரதிராஜாவும் நம் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறார். தனது மகன் கொல்லப்பட்டதும், பதட்டமடையும் பாரதிராஜா, அதற்கு தன்னால் எதுவும் செய்யமுடியவில்லையே என வருந்துவது ஒரு பக்கம், தன் மகனை கொன்றவர்களை எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்ற வெறி ஒரு பக்கம் என இரண்டு பக்கமும் போராடும் தந்தையாக அற்புதமாக நடித்திருக்கிறார். 

துறுதுறுப்பையெல்லாம் தொலைத்துவிட்டு பாந்தமான முகத்துடன், டீச்சராக வந்து போகிறார் லட்சுமிமேனன். கதாநாயகியாக இருக்கவேண்டும் என்ற கட்டாயத்துக்காக வந்துவிட்டு போகிறார். விஷாலுடன் இவர் பேசும் குறும்பு பேச்சு அழகு. சூரி படம் முழுக்க விஷாலுடன் வருகிறார். ஒரு சில காட்சிகள் கலகலப்பாக இருந்தாலும், வழக்கமான சூரி இந்த படத்தில் இல்லை. 

இவர்களைவிட விஷாலின் நண்பனாக வரும் விக்ராந்த் சிறிது நேரமே வந்தாலும் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து நம் மனதில் பதிந்து விடுகிறார். இந்த படத்திற்கு பிறகு மக்கள் மனதில் நல்ல ஒரு இடம் இவருக்கு கிடைக்கும். 

எதிர்நீச்சல் படத்தில் நந்திதாவுக்கு அப்பாவாக வரும் பரத், இந்த படத்தில் வில்லனாக கலக்கியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவரது ஒவ்வொரு முகபாவனைகளும் ரசிக்க வைக்கிறது. தொடர்ந்து வில்லன் வேடங்களில் ஒரு ரவுண்டு வரக்கூடிய தோற்றம் இருக்கிறது. 

வழக்கமாக தென் தமிழகத்தை மையமாகக் கொண்ட படம் என்றாலே வன்முறைக் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்த படத்திலும் அதுவே மேலாங்கியுள்ளது. படம் முழுக்க மதுரையில் இருக்கிற ஒரு உணர்வைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். வழக்கமான ஒரு பழி வாங்கல் கதை தான் என யாரும் சொல்லி விடாதபடி திரைக்கதையில் மெனக்கெட்டு இருக்கிறார். 

டி.இமான் இசையில் ஒத்தக்கடை மச்சான் பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஒளிப்பதிவும் சுமார் ரகம்தான். 

மொத்தத்தில் ‘பாண்டிய நாடு’ ஆட்சியை பிடிக்கும்.